Sunday, November 7, 2010

அவிநாசி அத்திக்கடவு திட்டம்

                      அன்னூர் : ""அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள் உள்ளன,'' என, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். அவிநாசி அத்திக்கடவு திட்டம் குறித்து விரிவான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அன்னூரின் தெற்கு பகுதிகள் புறக்கணிப்பட்டுள்ளதாக
பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அன்னூர் ஒன்றியத்தை சேர்ந்த பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம் ஆகிய ஆறு ஊராட்சிகளை இதில் சேர்க்க மத்திய அமைச்சர் ராஜா பரிந்துரை செய்தார். இப்பகுதிகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக நன்றி தெரிவித்து வரவேற்பு விழா கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. பச்சாபாளையம் பொதுநல மன்றத் தலைவர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில்,""திட்டத்தை விரைவில் துவக்கினால் பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்,'' என்றார்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: கொங்கு மண்டலத்தில் 60 ஆண்டுகளாக இந்த திட்டம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, பல நிர்வாக, சட்டரீதியான தடைகளால் துவங்காமல் இருந்தது. நிர்வாக சங்கடங்களை மாற்றி இத்திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள் உள்ளன. 650 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் முடியும்போது 800 முதல் 900 கோடி ரூபாய் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கொள்கைரீதியாக இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும்.  நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் உலக வங்கியிலிருந்து பெற வேண்டும். மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்துடன் தமிழக அரசு பேச வேண்டும். இந்த பயணம் தொடர வேண்டும்.

இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்குள் எதற்கு நன்றி தெரிவிக்கும் விழா என்று மறுத்தேன். ஆனாலும் இத்திட்டத்தை விரைவில் கொண்டு வர ஊக்கம் அளிக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல உற்ற தோழனாக இருப்பேன். இவ்வாறு, அமைச்சர் ராஜா பேசினார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன், காளப்பட்டி பேரூராட்சி தலைவர் பையாக் கவுண்டர், தொழிலதிபர்கள் மூர்த்தி, தர்மலிங்கம், மாவட்ட கவுன்சிலர் மணிமேகலை, ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அவிநாசி அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம்:சிறுமுகை பேரூராட்சியில் மின்மயான கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் தாய் சேய் பேறுகால பின் சிகிச்சை கட்டட திறப்பு விழா, நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.  கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார். மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: மின்மயானம், பெருநகரம் மற்றும் மாநகராட்சிகளில் மட்டுமே அமைக்கப்படுகிறது. நகராட்சி பகுதிகளில் கூட இன்னும் அமைக்கவில்லை. ஆனால் சிறுமுகை பேரூராட்சியில் பலதரப்பினரின் உதவியோடு மின்மயானம் அமைப்பது சிறப்பாகும்.

அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி.,களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் வைக்கப்படும் கோரிக்கைகளில் 80 சதவீதம் சுயநலம் சார்ந்திருக்கும்.  20 சதவீதம் தான் பொது நலமாக இருக்கும். சுயநலமும், பொது நலமும் கலந்ததுதான் பொது வாழ்க்கை. இரண்டும் சரியான விகிதத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். 
இவ்வாறு, அமைச்சர் ராஜா பேசினார். விழாவில் விஜயலட்சுமி அறிக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், சிறுமுகை பகுதி கைத்தறி குழுமம் தலைவர் ரங்கராஜ் ஆகியோர் பேசினர். பேரூராட்சி தலைவர் உதயகுமார் வரவேற்றார். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார். கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


1 comments:

Unknown said...

ஆஹா ! இப்படி ஒரு பெண்மகளைதான் எதிர்பார்க்கிறோம், உங்கள் எழுத்துக்களில் ஒரு அரசியல் துளியேனும் முளைக்குமானால் நாளை ஏற்படபோகும் மாசற்ற சமுதாயத்திற்கு உங்கள் கருத்துக்கள்தாம் படிக்கட்டுகள் என்பதில் ஐயமில்லை !!. அன்புடன் ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com)

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms