Sunday, August 20, 2023

ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The God Delusion

கலைஞர் 100 
=============
ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The God Delusion நாத்திக வாதத்துக்கான அதிமுக்கியமான புத்தகம். அந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவார்: அமெரிக்காவில் ஒரு வேட்பாளர் தன்னை நாத்திகன் என்று அறிவித்துக்கொண்டு கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது. நாத்திகர்கள் என்றால் 'கெட்டவர்கள்' என்ற சிந்தனை மக்களிடம் இருக்கிறதோ இல்லையோ ஒருவரை 'ஆத்திகர்' என்று சொல்லி விட்டால் அவர் நல்லவராகத்தான் இருப்பார் என்று மக்கள் இயல்பாகவே நம்பி விடுகிறார்கள். பற்பல நூற்றாண்டுகளாக மதங்கள் மக்களிடையே செய்திருக்கும் பிரச்சாரம் இன்றும் அந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது. 

அந்தப் பின்னணியில்தான் கலைஞரின் வாழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா மத நம்பிக்கைகள் ஆழமாக ஊடுருவி இருக்கும் தேசம். 'பழுத்த ஆத்திகர்' என்றாலே ரொம்ப ரொம்ப நல்லவர் என்ற பிம்பம் மக்களிடையே விரவி இருக்கும் தேசம். நேரு மாதிரி பெரும் மக்கள் செல்வாக்கு கொண்டிருந்த தலைவரே கூட தனது நாத்திக சந்தேகங்களை ஒளித்து வைத்துக் கொண்டுதான் இயங்க வேண்டி இருந்தது. இங்கே கடவுளை மறுதலித்து ஒரு அரசியல்வாதி இயங்குவதே கடினம். அதிலும் தேர்தல் களத்தில் வெற்றிகள் காண்பது வாய்ப்பே இல்லாத சமாச்சாரம். 

அந்த சூழலில்தான் கலைஞர் தன்னைத் தெளிவாக ஒரு நாத்திகராக பிரகடனப்படுத்திக் கொண்டு இயங்கினார். 'அம்பாள் என்றைக்கடா பேசி இருக்கிறாள்!' என்ற கலகக்குரலை ஐம்பதுகளிலேயே இங்கே ஒலிக்க விட்டவர். பின்னர் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்னரும், வாக்கரசியலில் தொடர்ந்து இயங்கி வந்த பின்னரும் கூட அந்த சித்தாந்தத்தில் முடிந்த அளவு சமரசங்கள் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அவர் கடவுள் மறுப்பாளர் என்று தெரிந்துதுமே மக்கள் பல முறை வாக்களித்து அவரை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒருவர் ஆத்திகராக இருப்பதற்கும் நல்லவராக இருப்பதற்கும் தொடர்பில்லாத விஷயம் என்று மக்கள் நம்புவதாகவே பார்க்கிறேன். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு மக்களிடையே தெளிவு இருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. 

அந்த ஆளுமையின் நூறாவது பிறந்த நாளில் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms