Tuesday, September 10, 2024

இந்தியாவும் மதுவிலக்கும்

அண்ணன் திருமாவளவன் சொல்வதைப்போல் இந்தியா பூரண மதுவிலக்கு நாடாக அறிவித்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்..
முன்குறிப்பு:-
கொஞ்சம் நீண்ட கட்டுரைதான்..
நான் சரக்கடிப்பேன் என்பதற்காக இதை சாதகமாக எழுதவில்லை என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.. 😜😜
********************************
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மதம், கலாச்சார, அல்லது சட்ட காரணங்களுக்காக மது விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடை செய்துள்ளன..  இந்த நாடுகளில் பெரும்பாலானவை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள்..  
சவுதி அரேபியா, குவைத், லிபியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈரான், சுடான். பாகிஸ்தான்,  பங்களாதேஷ், மாலத்தீவுகள் மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நாடுகள்..
இந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை, குறிப்பாக இஸ்லாமிய சட்டம் (ஷரியா), மது போன்ற போதைப்பொருட்களை உட்கொள்வதை தடை செய்கிறது.  இருப்பினும், இந்த நாடுகளில் சில, தனியார் கிளப்புகள் அல்லது சிறப்பு அனுமதி போன்ற சில நிபந்தனைகளில் முஸ்லீம் அல்லாதவர்களை மது அருந்த அனுமதிக்கின்றன..

இந்தியா தன்னை மது விளக்கு நாடாக அறிவித்து, மது உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வுக்கு நாடு தழுவிய தடை விதித்தால், அது குறிப்பிடத்தக்க மற்றும் பரவலான சமூக, பொருளாதார மற்றும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும்.  

அரசாங்க வருவாய் இழப்பு, வேலை இழப்பு, சமூக நடத்தை மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதன் தாக்கம் ஆழமாக இருக்கும்.  சில சாத்தியமான விளைவுகள் என்னவென்று பார்ப்போம்..

அரசாங்க வருவாய் இழப்பு: மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மது வரி கணிசமாக பங்களிக்கிறது.  நாடு தழுவிய தடையானது கலால் வரியில் கணிசமான இழப்பை ஏற்படுத்தும், இது பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும், பொது சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை பாதிக்கும்.. சரி இதைக்கூட ஏதோ வேறு வகையில் சரி செய்து கொள்ளலாம்..

வேலைவாய்ப்பில் பாதிப்பு: உற்பத்தி, விநியோகம், சில்லறை விற்பனை உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய மதுபானத் தொழில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.  மது உற்பத்தி சார்ந்த பிற  தொழில்களும் பாதிக்கப்பட்டு வேலை இழப்பை ஏற்படுத்தும்..

விவசாயத்தின் மீதான குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. மது தொழில் கோதுமை, திராட்சை, கரும்பு, முந்திரி, தேங்காய், மற்றும் அரிசி போன்ற விவசாய பொருட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த பயிர்களை பயிரிடும் விவசாயிகள் தேவை குறைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்..

சுற்றுலா பாதிப்பு: சுற்றுலா, குறிப்பாக மது மற்றும் மது கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலங்களில் (பாண்டிச்சேரி, கோவா அல்லது கேரளா ) எதிர்மறையாக பாதிக்கப்படலாம்.  சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து அதன் மூலம் வரும் வேலை வாய்ப்பும் அரசு வருமானமும் குறைய நேரிடும் ..

சரி பொருளாதார வேலை வாய்ப்பு போன்றவற்றில் தாக்கத்தை விட இதனால் ஏற்படும் சமூக விளைவுகளையும் பார்ப்போம்..

 சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம்.. வரலாற்று ரீதியாக, மதுவிலக்கு பெரும்பாலும் கறுப்புச் சந்தையின் எழுச்சிக்கு வழிவகுத்தது.  கடத்தல், சட்டவிரோத மது உற்பத்தி  மற்றும் ஊழல் அதிகரிக்கும்.  சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட மது வகைகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றது மற்றும் விஷத்தன்மை கொண்டதாக மாறுவதற்கும்  வழிவகுக்கும் என்பதால், இது  உடல் உபாதைகளுக்கும் உயிரிழப்பிற்கும்  வழிவகுக்கும்.. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் ரகசியமாக தயாரிப்பவர்களையும் கண்காணிக்க ஒரு பெரும் காவல் படை அல்லது கண்காணிப்பு படை தேவைப்படும், இது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது..

 மேலும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கோவா போன்ற மதுபானத்துடன் வலுவான கலாச்சார தொடர்புகளைக் கொண்ட  ஒரு மாறுபட்ட நாடு. இவ்வளவு ஏன் நம் தமிழ் கலாச்சாரத்தில் பல காலமாக மதுவை பயன்படுத்துவதாக பல இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.. தற்போது கூட கிராமப்புற நாட்டார் தெய்வங்களுக்கு மது படைக்கும் பழக்கம் பரவலாக இருக்கிறது..  முழு தடை இந்த பகுதிகளில் எதிர்ப்பை சந்திக்கலாம், இது உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புகள் அல்லது அரசியல் ஸ்திரமின்மைக்கு வழி வகுக்கலாம்..
இந்தியாவில் பல கலாச்சார, மத மற்றும் சமூக நடைமுறைகள் உள்ளது.  ஒரு திடீர் தடையானது பாரம்பரிய கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் சமூகக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும், குறிப்பாக மதுவை கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளும் சமூகங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்..

நாடு தழுவிய மதுவிலக்கை அமல்படுத்தும் போது சட்டவிரோத உற்பத்தி, கடத்தல் மற்றும் மது விநியோகத்தை எதிர்த்துப் போராட பெரும் படை தேவைப்படும்.  இது காவல்துறையின் வளத்தை சீர்குலைத்து பல துறைகளில் ஊழலுக்கும் வழி வகுக்க வாய்ப்பு உண்டு.

 நீதித்துறைக்கு அதிக சுமை ஏற்பட வாய்ப்பு உண்டு .. கடுமையான மதுவிலக்கு சட்டங்கள் மூலம், தடையை மீறுவது தொடர்பான வழக்கு நீதித்துறைக்கு அதிக சுமையாக இருக்கலாம், இது நீண்ட காலதாம் மற்றும் நீதிமன்றங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும்.

மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்று பார்த்தால்..
மது தொடர்பான உடல்நலப் பிரச்சினையான கல்லீரல் நோய், உடல்நல குறைவு,  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் மது துஷ்பிரயோகம் தொடர்பான குடும்ப வன்முறை, போதையில் ஏற்படும் வன்முறைகள் மற்றும் கொலைகள்  போன்றவற்றைக் குறைக்கலாம்..

ஆனால் தற்போது  மது பழக்கம் உள்ளவர்களிடம் உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், மனநலப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது..

இந்தியா கடந்த காலங்களில் மதுவிலக்கை சோதனை செய்தது.  குஜராத் மற்றும் பீகார் போன்ற பல மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளன, ஆனால் இந்த தடைகளை அமல்படுத்துவது பெரும்பாலும் கடினமாக உள்ளது மற்றும் சட்டவிரோத சந்தைகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது.  1970 களில் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது, ஆனால் பலர் மது அருந்துவதைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும் பொருளாதார விளைவுகளாலும்  அது திரும்ப பெறப்பட்டது.

 உலகளவில், மதுவிலக்கு பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளுக்கே வழிவகுத்தது,  அமெரிக்காவின்  தடை காலத்தில் (1920-1933), தற்கொலைகள், குற்றங்கள் மற்றும் கொள்ளையடித்தல் ஆகியவற்றில் ஒரு பெரும் எழுச்சியைக் கண்டது. அதன் பிறகு அது திரும்ப பெறப்பட்டது ... குறைந்த மக்கள் தொகை கொண்ட வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே இந்த நிலைமை என்றால் இந்தியாவை சற்று யோசித்துப் பாருங்கள்..

இந்தியாவை மதுவிலக்கு நாடாக அறிவிப்பது பொருளாதார சீர்குலைவுகள் மற்றும் கறுப்பு சந்தை வளர்ச்சியில் இருந்து சமூக அமைதியின்மை மற்றும் சட்ட ஒழுங்கு சவால்கள் வரை பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடும்.  இது மது தொடர்பான சில உடல்நலம் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் குறைக்கும்  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதே வேளையில், ஒட்டுமொத்த தாக்கம் தீர்வுகளை விட அதிகமாக இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது., குறிப்பாக இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில்.  முழுமையான தடை விதிப்பதை விட பொறுப்பான நுகர்வுடன் சமநிலைப்படுத்தும் ஒழுங்குமுறை  படுத்தும் நடவடிக்கையே சிறந்த அணுகுமுறையாக இருக்கும்..

நன்றி
இப்படிக்கு உங்கள் 
பாபு சாந்தி

Sunday, April 21, 2024

காட்ட வித்து கள்ளு குடிச்சா கவுண்டனா

கொங்கு பகுதியில் உள்ள கவுண்டர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இருந்த காலம், பிறகு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக கட்சி ஆரம்பித்தபோது தீவிர திராவிட பற்றாளர்களாக மாறியவர்கள் சிலர், அந்த சமயத்தில் இலவச மின்சாரம், கொங்கு வேளாளர் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, என்று தன் ஜாதிக்கான அங்கீகாரத்தை பெற்று விவசாயம், தொழில், கல்வி என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு விரைவாக முன்னேறினார்கள்.. 
பல லோ கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ் குடும்பங்கள் மிடில் கிளாஸ் மற்றும் ஹையர் கிளாஸாக உயர்ந்தது அந்த சமயத்தில்தான் .. பிறகு எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்தவுடன் பல பேர் பிரிந்து சென்று அதிமுகவில் இணைந்தார்கள்.. மீதமிருந்தோர் மதிமுக பிரிந்த போது மதிமுகவில் சேர்ந்தார்கள்... இது நான் விசாரித்து கேள்விப்பட்ட அரசியல்.. 1996 க்கு பிறகு நான் நேரடியாக அனுபவ பூர்வமான அரசியலை சொல்கிறேன் கேளுங்கள்..
மதிமுக செல்ஃப் எடுக்காது என்று தெரிந்தவுடன் மதிமுகவில் இருந்த என் தூரத்து உறவினர்கள் சிலர் தீவிர மதிமுகவிலிருந்து வேறு பல கட்சிகளுக்கும் தாவினார்கள்.. அதில் சிலர் திமுகவிற்கும் வந்தார்கள்.. 
பிறகு கேப்டன் விஜயகாந்த் தேமுதிக அறிவித்தபோது அவர்களே அதற்கும் சென்றார்கள்.. தேமுதிக ஆரம்பித்து சில நாட்களிலேயே கொங்குநாடு முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது ..நம்ம சமூகத்திற்கு இன்று ஒரு கட்சி வந்துவிட்டது ஆகவே அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்று பல பேர் பல கட்சிகளில் இருந்து விலகி கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள்..
கருமத்தப்பட்டியில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட்டது .. பிறகு பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன், நாகராஜ் தனித்தனியாக பிரிந்தது கட்சில் பிளவை ஏற்படுத்தியது.. நாட்கள் கடந்தன. ஜெயலலிதா மறைந்தார். அதிமுக எடப்பாடியின் கையில் வந்தவுடன் நம்ம ஜாதியில் ஒரு முதல்வர், அவரையே ஆதரிப்போம் என்று அதிமுகவை ஆதரிக்க துவங்கினார்கள். சில தீவிர ஜாதி வெறியர்கள் எடப்பாடியை கடுமையாக எதிர்த்தார்கள். 
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் விந்தையானது.. கள்ளச்சி கால்ல விழுந்தவனெல்லாம் கவுண்டனே இல்ல என்றார்கள்..
(இந்த இடம்தான் மனச தேத்திக்க வேண்டிய இடம் சிரிக்காம படிக்கவும்)

தற்போது அந்த இரு பிரிவுகளிலும் இருந்து ஒரு குரூப் நம்ம ஜாதியில் ஒரு பிரதமர் வேட்பாளர் கிடைத்துவிட்டார். ஆதலால் அவரை ஆதரிக்க வேண்டும் என்று அண்ணாமலை பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்..
இவர்களில் ஈமு கோழி, ஃபைன் பியூச்சர், மை வி3 என எளிதாக பணம் சம்பாதிக்க நினைத்து பணத்தை இழந்தவர்கள் .. கொஞ்சம் வசதி வாய்ப்பு வந்துவிட்டால் பேராசையும், சுயநலமும் கூடவே வந்துவிடும் போல் தோன்றுகிறது.. பொருளாதாரம் உயர அறிவும் கல்வியும் உயர வேண்டும் ..
எனக்கு தெரிந்த வகையில் வெகு சில கவுண்டர்கள் மட்டுமே தீவிர கொள்கை பற்றாளராக நீண்ட நெடுங்காலமாக திமுகவில் இருக்கிறார்கள்..

நான் இங்கே குறிப்பிட்டது பொதுவாக அனைவரையும் அல்ல, பெரும்பாலானவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று பெரிய அரசியல் ஆர்வம் இல்லாமல் காத்தடிக்கும் பக்கம் சாயும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்.. தற்போது பொள்ளாச்சியிலிருந்து ஒரு இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற பெண் பேசிய ஆடியோ வைரலானது.. 
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் சமூகம் தன் அடுத்த தலைமுறையை அன்னியனுக்கு அடமானம் வைத்து விடும் என்பதுதான் வரலாறு..
சரியான வரலாற்றை படியுங்கள் பகுத்தறிவோடு செயல்படுங்கள்.. நன்றி ..
 

Sunday, August 20, 2023

ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The God Delusion

கலைஞர் 100 
=============
ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The God Delusion நாத்திக வாதத்துக்கான அதிமுக்கியமான புத்தகம். அந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவார்: அமெரிக்காவில் ஒரு வேட்பாளர் தன்னை நாத்திகன் என்று அறிவித்துக்கொண்டு கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது. நாத்திகர்கள் என்றால் 'கெட்டவர்கள்' என்ற சிந்தனை மக்களிடம் இருக்கிறதோ இல்லையோ ஒருவரை 'ஆத்திகர்' என்று சொல்லி விட்டால் அவர் நல்லவராகத்தான் இருப்பார் என்று மக்கள் இயல்பாகவே நம்பி விடுகிறார்கள். பற்பல நூற்றாண்டுகளாக மதங்கள் மக்களிடையே செய்திருக்கும் பிரச்சாரம் இன்றும் அந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது. 

அந்தப் பின்னணியில்தான் கலைஞரின் வாழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா மத நம்பிக்கைகள் ஆழமாக ஊடுருவி இருக்கும் தேசம். 'பழுத்த ஆத்திகர்' என்றாலே ரொம்ப ரொம்ப நல்லவர் என்ற பிம்பம் மக்களிடையே விரவி இருக்கும் தேசம். நேரு மாதிரி பெரும் மக்கள் செல்வாக்கு கொண்டிருந்த தலைவரே கூட தனது நாத்திக சந்தேகங்களை ஒளித்து வைத்துக் கொண்டுதான் இயங்க வேண்டி இருந்தது. இங்கே கடவுளை மறுதலித்து ஒரு அரசியல்வாதி இயங்குவதே கடினம். அதிலும் தேர்தல் களத்தில் வெற்றிகள் காண்பது வாய்ப்பே இல்லாத சமாச்சாரம். 

அந்த சூழலில்தான் கலைஞர் தன்னைத் தெளிவாக ஒரு நாத்திகராக பிரகடனப்படுத்திக் கொண்டு இயங்கினார். 'அம்பாள் என்றைக்கடா பேசி இருக்கிறாள்!' என்ற கலகக்குரலை ஐம்பதுகளிலேயே இங்கே ஒலிக்க விட்டவர். பின்னர் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்னரும், வாக்கரசியலில் தொடர்ந்து இயங்கி வந்த பின்னரும் கூட அந்த சித்தாந்தத்தில் முடிந்த அளவு சமரசங்கள் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அவர் கடவுள் மறுப்பாளர் என்று தெரிந்துதுமே மக்கள் பல முறை வாக்களித்து அவரை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒருவர் ஆத்திகராக இருப்பதற்கும் நல்லவராக இருப்பதற்கும் தொடர்பில்லாத விஷயம் என்று மக்கள் நம்புவதாகவே பார்க்கிறேன். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு மக்களிடையே தெளிவு இருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. 

அந்த ஆளுமையின் நூறாவது பிறந்த நாளில் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Friday, November 26, 2010

மாபெரும் கிரிக்கெட் திருவிழா

அவினாசி கொங்கு நாடு ஸ்போர்ட்ஸ் அகாடமி  வழங்கும் மாபெரும்  கிரிக்கெட் திருவிழா .. முதல் பரிசு - 5000  + கோப்பை , இரண்டாம் பரிசு - 4000  + கோப்பை , முன்றாம் பரிசு - 2000 , நான்காம் பரிசு - 2000 ...... நுழைவு  கட்டணம் - 500 .... தொடர்புக்கு : 9600711555 ..... கடைசி தேதி : 20 / 12 /2010 .....விரையுங்கள் பரிசை வெல்லுங்கள் ....

Sunday, November 7, 2010

அவிநாசி அத்திக்கடவு திட்டம்

                      அன்னூர் : ""அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள் உள்ளன,'' என, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். அவிநாசி அத்திக்கடவு திட்டம் குறித்து விரிவான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அன்னூரின் தெற்கு பகுதிகள் புறக்கணிப்பட்டுள்ளதாக
பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அன்னூர் ஒன்றியத்தை சேர்ந்த பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம் ஆகிய ஆறு ஊராட்சிகளை இதில் சேர்க்க மத்திய அமைச்சர் ராஜா பரிந்துரை செய்தார். இப்பகுதிகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக நன்றி தெரிவித்து வரவேற்பு விழா கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. பச்சாபாளையம் பொதுநல மன்றத் தலைவர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில்,""திட்டத்தை விரைவில் துவக்கினால் பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்,'' என்றார்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: கொங்கு மண்டலத்தில் 60 ஆண்டுகளாக இந்த திட்டம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, பல நிர்வாக, சட்டரீதியான தடைகளால் துவங்காமல் இருந்தது. நிர்வாக சங்கடங்களை மாற்றி இத்திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள் உள்ளன. 650 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் முடியும்போது 800 முதல் 900 கோடி ரூபாய் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கொள்கைரீதியாக இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும்.  நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் உலக வங்கியிலிருந்து பெற வேண்டும். மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்துடன் தமிழக அரசு பேச வேண்டும். இந்த பயணம் தொடர வேண்டும்.

இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்குள் எதற்கு நன்றி தெரிவிக்கும் விழா என்று மறுத்தேன். ஆனாலும் இத்திட்டத்தை விரைவில் கொண்டு வர ஊக்கம் அளிக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல உற்ற தோழனாக இருப்பேன். இவ்வாறு, அமைச்சர் ராஜா பேசினார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன், காளப்பட்டி பேரூராட்சி தலைவர் பையாக் கவுண்டர், தொழிலதிபர்கள் மூர்த்தி, தர்மலிங்கம், மாவட்ட கவுன்சிலர் மணிமேகலை, ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அவிநாசி அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம்:சிறுமுகை பேரூராட்சியில் மின்மயான கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் தாய் சேய் பேறுகால பின் சிகிச்சை கட்டட திறப்பு விழா, நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.  கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார். மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: மின்மயானம், பெருநகரம் மற்றும் மாநகராட்சிகளில் மட்டுமே அமைக்கப்படுகிறது. நகராட்சி பகுதிகளில் கூட இன்னும் அமைக்கவில்லை. ஆனால் சிறுமுகை பேரூராட்சியில் பலதரப்பினரின் உதவியோடு மின்மயானம் அமைப்பது சிறப்பாகும்.

அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி.,களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் வைக்கப்படும் கோரிக்கைகளில் 80 சதவீதம் சுயநலம் சார்ந்திருக்கும்.  20 சதவீதம் தான் பொது நலமாக இருக்கும். சுயநலமும், பொது நலமும் கலந்ததுதான் பொது வாழ்க்கை. இரண்டும் சரியான விகிதத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். 
இவ்வாறு, அமைச்சர் ராஜா பேசினார். விழாவில் விஜயலட்சுமி அறிக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், சிறுமுகை பகுதி கைத்தறி குழுமம் தலைவர் ரங்கராஜ் ஆகியோர் பேசினர். பேரூராட்சி தலைவர் உதயகுமார் வரவேற்றார். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார். கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


Saturday, November 6, 2010

அவிநாசி -அருகில் உள்ள ஆலயங்களின் தூரம்

SNOTemple NameDistance
1அவிநாசி (திருப்புக்கொளியூர்)0 கிமீ
2திருமுருகபூண்டி5.31 கிமீ
3திருநணா (பவானி)52.91 கிமீ
4திருப்பாண்டிக்கொடுமுடி68.71 கிமீ
5திருச்செங்கோடு71.65 கிமீ
6வெஞ்சமாக்கூடல்88.61 கிமீ
7கருவூர் (கரூர்)91.86 கிமீ
8திருஈங்கோய்மலை126.03 கிமீ
9திருவாட்போக்கி (ரத்னகிரி)126.35 கிமீ
10திருகடம்பந்துறை128.28 கிமீ
11திருப்பராய்த்துறை145.64 கிமீ
12திருவேடகம்154.06 கிமீ
13திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி )155.91 கிமீ
14திருப்பைஞ்ஞீலி155.91 கிமீ
15கற்குடி (உய்யக் கொண்டான் மலை )157.31 கிமீ
16திருமூக்கிச்சரம் (உறையூர்)158.54 கிமீ
17திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிகுளம்)158.98 கிமீ
18திருச்சிராப்பள்ளி160.86 கிமீ
19திருவானைக்கா161.2 கிமீ
20திருகொடுங்குன்றம் ( பிரான்மலை)165.51 கிமீ
21திருஆப்பனூர்168.05 கிமீ

திருப்புக்கொளியூர் (அவிநாசி)

திருப்புக்கொளியூர் (அவிநாசி)

இறைவர் திருப்பெயர்  : அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர், 
      அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.
இறைவியார் திருப்பெயர்  : கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.
தல மரம்   : பாதிரி (ஆதியில் மாமரம்) 
தீர்த்தம்    : காசிக்கிணறு, நாகக்கன்னிகைத் தீர்த்தம், ஐராவதத்தீர்த்தம்.
வழிபட்டோர்   : 
தேவாரப் பாடல்கள்  : சுந்தரர் - எற்றான் மறக்கேன்.

தல வரலாறு

  • பழைய பதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்டவெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய நகரமே தற்போதுள்ள அவிநாசியாகும்.
  • அவிநாசி - விநாசம் இல்லாதது. ஊர்ப்பெயர் - புக்கொளியூர், இறைவன் - அவிநாசி, இறைவன் பெயரே இன்று ஊர்ப்பெயராயிற்று.
  • இக்கோயிலில் முதலில் உள்ள வழிகாட்டி விநாயகரை தரிசித்து, பிறகு தவத்திலிருக்கும் (பாதிரி மரத்து) அம்பாளைத் தரிசித்து, பிறகுதான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
avinaci temple

சிறப்புக்கள்

  • கல்லாலான தீபஸ்(துவஜ)தம்பத்தின் கீழ் தனியே சுந்தரர் உருவம், முதலை பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
  • காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.
  • கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கி.மீ. தொலைவில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளது.
  • 1695-ல் வாழ்ந்த சிக்கதேவராய உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் சுற்றுப்புற மண்டபச் சுவர்களிலும்; சந்நிதித்தூண்களிலும் உள்ளன.
  • தீ விபத்துக்குப் பிறகு, அதை ஈடு செய்யும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.
avinaci temple lake


அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். கோவையிலிருந்து 40 கி. மீ; திருப்பூரிலிருந்து 14 கி. மீ; திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி. மீ; கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms